உருளைக்கிழங்கு சிப்ஸ் சேலை

339
Advertisement

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளால் செய்யப்பட்ட சேலை சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. எத்தனை விதம்விதமான ஆடைகள் வந்தாலும் அத்தனையையும் வாங்கி உடுத்தி மகிழ்வது பெண்களுக்கே உரிய இயல்பான குணமாகும். அதிலும் வித்தியாசமான புடவை என்றால், பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் வந்துவிடும். அதனை உடனே வாங்கி உடுத்தி மகிழ்வார்கள்.

அந்த வகையில், வாழை நாரால் நெய்யப்பட்ட சேலை சில ஆண்டுகளுக்குமுன் சென்னையில் பிரபலமானது. சில மாதங்களுக்குமுன் பெங்களூரு நகரில், எலக்ட்ரானிக் விளக்குகள் இணைக்கப்பட்ட சேலை அணிந்து, அலுவலகத்தில் உலாவந்த ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகிப் பெண்களைக் கவர்ந்தது.

அதன்தொடர்ச்சியாகத் தற்போது புதுமையான உருளைக்கிழங்கு சிப்ஸ் சேலையை உருவாக்கிப் பெண்களின் மனதில் வலம்வரத் தொடங்கியுள்ளார் ஒரு பெண்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் பெண் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை இணைத்துத் தான் உருவாக்கிய சேலையுடன் மாடலிங் பெண்போல் மேடையில் தோன்றுகிறார். அந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் சேலை மற்ற பெண்களைக் கவரத் தொடங்கியுள்ளது.

பொதுவாக, தின்பண்டங்களைத் தின்றபிறகு அந்தப் பாக்கெட்டுகளைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவோம். ஆனால், அவற்றை ஆக்கப்பூர்வமமாகப் பயன்படுத்த நினைத்த அந்தப் பெண் தனது முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார்.

எந்தப் பொருளையும் பெண்கள் கலைக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள் இல்லத்தை நன்கு அழகுபடுத்திப் பிரம்மிக்க வைத்திருக்கும் பெண்களுக்குள் பொதிந்து கிடக்கும் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தினால் சாதனையாளர்களாக மிளிர்வார்கள் என்பதற்கு வீடியோவில் காணும் பெண்ணே தக்க உதாரணம்.