சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு!

121

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடி, பள்ளி வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை தீ வைத்து எரித்தனர். திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக, சென்னை மெரினாவில் ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.