பிரதமர் மோடி சென்னை வருகை : ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிப்பபு.

226

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் முதல் நேரு விளையாட்டு அரங்கம், அண்ணா பல்லைக்கழகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை யொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி, நேரு விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடியின் வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். நேரு விளையாட்டரங்கில் மட்டும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்று முதல் வாகன சோதனை மற்றும் விடுதிகளில் தீவிர சோதனை நடைபெறும் என்றும் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.