அரசுக்குத் தலைமுடி தானம் அளித்த மக்கள்…

166
Advertisement

அரசுக்குப் பொதுமக்கள் தங்களின் தலைமுடியை வழங்கிய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

இந்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி, பெரு நாட்டருகே உள்ள டாங்கோ எரிமலை வெடித்ததால் கடலில் வலுவான அலைகள் ஏற்பட்டன. அதன்காரணமாக அந்நாட்டின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் கொந்தளித்தது. அப்போது பாம்பிலா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசென்ற இத்தாலி நாட்டுக் கப்பலில் தீப்பிடித்தது.

தீ உடனே அணைக்கப்பட்டு விட்டாலும், கப்பலில் இருந்த 6 ஆயிரம் கச்சா எண்ணெய்ப் பீப்பாய்கள் பெரு நாட்டுக் கடலில் லிமா பகுதியில் கவிழ்ந்து சிந்தியது. அவை 320 கால்பந்து மைதானம் அளவுக்குச் சமமான நீர்ப்பரப்பில் சிந்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 21 கடற்கரைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமன்றி, மனிதர்களும் பாதிக்கப்படும் பேராபத்து நிலவி வருகிறது.

Advertisement

கடலில் பரவியுள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றித் துப்புறவுப் பணி செய்வதற்காக நிபுணர்களை அனுப்புமாறு ஐநா சபை மற்றும் அமெரிக்காவிடம் பெரு நாடு கோரியுள்ளது.
அதேசமயம், பெருநாட்டு மக்களிடம், அவர்களின் தலைமுடியை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டது. அரசின் அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளனர் அந்நாட்டுப் பொதுமக்கள்.

முடியைக் கயிறுபோல் திரித்து, அதனை அலைகளில் மூழ்கும்படிச் செய்வதால், நீரிலுள்ள எண்ணெய்ப் படலங்களை முடி உறிஞ்சிவிடும் எனக் கூறப்படுகிறது. இந்த முயற்சியை அந்நாட்டு அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, தங்களின் தலைமுடியை அரசிடம் தானம் அளித்து வருகின்றனர் பொதுமக்கள்.

பெரு நாட்டு அரசின் இந்த வித்தியாசமான செயலை வியந்து பார்க்கின்றனர் பலர். அதேசமயம், அட்டகாசம் படத்தின் கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்கிற தல அஜித்தின் நகைச்சுவைக் காட்சியைப்போல உள்ளது பெரு நாட்டு அரசின் இந்த முயற்சி எனவும் விமர்சித்து வருகின்றனர் சிலர்.