Saturday, March 22, 2025

கொளுத்தும் வெயில்…. இரவிலும் கடற்கரையை நோக்கி ஓடும் மக்கள்

அர்ஜென்டினா நாட்டில் கடும் வெயில் நிலவுவதால், இரவு நேரத்திலும் மக்கள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

வடக்கிலிருந்து தெற்காக 3,700 கிலோ மீட்டர் நீண்டு பரந்துள்ள தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, பலவிதமான காலநிலைகளைக் கொண்டுள்ளது.

தற்போது அங்கு 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வரலாறு காணாத வெப்ப நிலை நிலவுகிறது. அர்ஜென்டினாவின் 115 ஆண்டுகால வரலாற்றில் இப்போது நிலவும் வெப்ப நிலையே மிக அதிகமானதாகக் கருதப்படுகிறது.

வீடுகள் உலைபோல வெப்பமாகத் தகிக்கின்றன. இதனால், மக்கள் நிழல் சரணாலயம் தேடிச் செல்கின்றனர். குளம், ஏரி போன்ற நீர்நிலைகளைத் தேடிச்செல்கின்றனர்.

குறிப்பாக, கடற்கரைக்குச் சென்று குளிர்ந்த கடற்காற்றை அனுபவிக்கின்றனர். இரவு நேரத்தில் கடலில் நீராடி வெப்பத்தை எதிர்கொள்கின்றனர். தாகத்தைத் தணிக்க குளிர்பானங்களை மக்கள் அருந்தியபோதிலும், அவை சூடான தேநீர்போல இருப்பதாக வேதனை அடைந்துள்ளனர்.

பல நகரங்களில் மின்சாரத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர். வேளாண்மைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாவரங்கள் வறண்டு காணப்படுகின்றன.

தாவரங்களையும் தங்களையும் குளிர்விக்க விரைவில் மழை வரும் என்னும் எதிர்பார்ப்பில் உள்ளனர் அர்ஜென்டினா மக்கள்.

இந்த திடீர் வெப்ப நிலைக்கு காரணம் தெரியாமல் வானிலை ஆய்வாளர்கள் தவித்து வருகின்றனராம்.

Latest news