ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருப்பதால், மெயின் அருவி, ஐந்தருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன, நீர்வரத்து உயர்ந்து வருவதால் பரிசல் இயக்கவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது