தற்போது இந்தியர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்
அதிகரித்து 70.8 வயதாக உள்ளது. இது 1990களில் 59.6
ஆக இருந்தது.
அதேசமயம் உலகளவில் மனிதர்களின் சராசரி
ஆயுட்காலம் 73.2 ஆக உள்ளது.
ஹாங்காங் மக்கள்தான் உலகில் அதிக ஆயுட்காலத்தோடு
வாழ்வதாகக் கணக்கிட்டுள்ளனர். இவர்களின் ஆயுட்காலம்
85 ஆண்டுகள் 29 மாதங்கள்.
காற்று மாசு, உயர் ரத்த அழுத்தம், புகையிலைப் பண்பாடு,
மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன், உயர் ரத்த
சர்க்கரை ஆகிய நோய்களே இந்தியர்களின் ஆயுட்காலத்தைக்
குறைப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களின் ஆயுட்காலம் 71.4 ஆக உள்ளது. தமிழகப்
பெண்கள் 74.8 ஆண்டுகளும், ஆண்கள் 68.5 ஆண்டுகளும்
வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரளா முதலிடத்தில் உள்ளது. இங்குள்ளவர்களின் சராசரி
ஆயுள் 75 ஆண்டுகள், ஒரு மாதம். கேரளப் பெண்கள் 79
வருடங்களும் 9 மாதங்களும். கேரள ஆண்கள் 72 ஆண்டுகள்
2 மாதங்கள் வாழ்வதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்த நிலையில் மனிதர்களின் ஆயுளை 150 வருடங்களாக
நீட்டிக்க முடியும் என்கிற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சிங்கப்பூரில் உள்ள ஜிரோ என்னும் உயிரி
தொழில்நுட்ப நிறுவனம் மனிதர்களின் வாழ்நாளை நீட்டிப்பது
குறித்து ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில் மனிதர்களின்
ஆயுளை 150 வருடங்களாக அதிகரிக்கலாம் என்ற கூறியுள்ளது.
விஞ்ஞானி டிமோதி பைர்கவ் தலைமையிலான இந்த ஆய்வுக்
குழு ரத்த அணுக்களின் இழப்பை ஈடுசெய்யும் திறன் 35 வயதிலிருந்து
45 வயதுக்குள் குறையத் தொடங்கிவிடுவதாகக் கண்டறிந்துள்ளது.
இந்தத் திறன் குறைவதால் மனிதர்களின் வாழ்நாள் குறைந்துவிடுகிறது.
புதிய செல்களை உருவாக்கும் திறன் குறைந்துவிடுவதால் ஆயுள் குறைகிறது.
செல்கள் உருவாவது முற்றிலும் நின்றுவிடும்போது மரணம் நிகழ்வதாக
இந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
அதேசமயம் இன்னோர் ஆச்சரியமான உண்மையையும் கண்டறிந்துள்ளது.
ஒருவரின் உடல் புதிய செல்களை உருவாக்கும் திறனை முழுவதுமாக
இழப்பதற்கு 120 முதல் 150 ஆண்டுகள் ஆகுமாம்.
இந்த உண்மையின் அடிப்படையில், ரத்த அணுக்கள் இழப்புக்கேற்பப்
புதிய செல்களை உருவாக்கும் திறனை அதிகரித்தால் 150 ஆண்டுகள்
வரை வாழலாம் என்னும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது
ஜிரோ நிறுவனம்.
இந்த ஆய்வில் கண்ட உண்மைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும்
விதமாக ரத்த அணுக்கள் அழியும் வேகத்தைக் குறைத்து புதிய செல்கள்
உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்னும்
இனிப்பான செய்தியையும் வெளியிட்டுள்ளது ஜிரோ நிறுவனம்.
அற்பாயுளைப் பற்றிய கவலையும் பயமும் இனியில்லை.