திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது – மாநில ஆணையம்

265

திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த மே மாதம் பிரியாணி திருவிழா நடத்த திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறித்திருந்தது. சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் என்ற இடத்திலுள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைட்சி பிரியாணி தவிர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனையடுத்து ஆம்பூர் பிரியாணி திருவிழாவை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் விசிக தொழிலாளர் அமைப்பு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தது. இதனை பரிசீலனை செய்த ஆணையம் 20 வகையான பிரியாணிக்கள் இடம்பெறும் திருவிழாவில் மாட்டிறைட்சி பிரியாணியை அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாகா பன்றி இறைச்சி குறித்து குறிப்பிட்டதுடன், சாதி பாகுபாடு காட்டவில்லை என்று விளக்கமளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அரசு ஏற்பாடு செய்யும் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை தவிர்க்க கூடாது என்றும், அது பாகுபாட்டை ஏற்படுத்தும் எனவும் உத்தரவிட்டுள்ளது.