கேஸ் சிலிண்டருக்குள் மதுபானம்

261
Advertisement

சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் மதுபானம் கடத்திய
நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் மது விற்பனை
மற்றும் மது அருந்துதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மதுவுக்குத் தடைவிதிக்கப்பட்டதில் இருந்தே மதுபானம் வாங்கவும்,
அவற்றைப் பதுக்கி வைக்கவும் அங்குள்ளவர்கள் பல்வேறு
வகையான தந்திரங்களைக் கையாண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அம்மாநிலத் தலைநகர் பாட்னாவில்
பிரபாஹோர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கடம்காட் பகுதியில்
மது கடத்தப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அங்குசென்ற போலீசார் சம்பவ இடத்தை சோதனை செய்ததில்
எல்பிஜி சிலிண்டரில் வைத்து மதுபானம் விற்பனை செய்த பூஷன்
ராய் என்ற நபரைக் கைதுசெய்தனர்.

அந்த நபர் சிலிண்டரின் அடிப்பகுதியை சதுர வடிவில் வெட்டி
அதனுள் 50 லிட்டர் மதுபானப் பாட்டில்களை வைத்திருந்ததைப்
பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குப் பூட்டுப்போட்டு
பூட்டி வைத்திருந்திருக்கிறார் குற்றவாளி பூஷன் ராய்.

இதற்கிடையே பீகாரில் மது அருந்தி பிடிபடுவோருக்கு கடும்
தண்டனையை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இதற்கான சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தச்
சட்டத்தின்படி மது அருந்தி முதன்முறையாகப் போலீசாரிடம்
பிடிபடுவோருக்கு 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம்
விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். மீண்டும் பிடிபட்டால் ஒரு
மாதம் சிறைத்தண்டனையாம்..