2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் இலவச பஸ் பாஸ்

240
Advertisement

அரசுப் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, பிறந்த நாள் பரிசாக வாழ்நாள் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பயணிக்க பாஸ் வழங்கிய உத்தரவு பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், பெத்தகொத்தப் பள்ளி கிராமம் அருகே கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி தெலுங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுப் பெண் குழந்தை பிறந்தது.

இதேபோல், டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி சித்திப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்த தெலுங்கானா அரசுப் பேருந்தில் பயணித்த மற்றொரு பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அப்பேருந்துகளில் பயணித்த சகப் பெண் பயணிகள் பிரசவத்துக்கு உதவினர். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சுகாதார ஊழியர்களுடன் இணைந்து குழந்தைகளையும் தாய்மார்களையும் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தாய்மார்களும் குழந்தைகளும் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 2 பேருந்துப் பணியாளர்கள், அதில் பயணித்த பயணிகள் ஆகியோரின் மனித நேயத்தைப் பாராட்டியுள்ள தெலுங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி.சி. சஜ்ஜனார் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், அரசுப் பேருந்துகளில் பிறந்த அந்த 2 பெண் குழந்தைகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தெலுங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவச அனுமதிச் சீட்டு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.