மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தியை நிறுத்திய சிறுத்தை

381
Advertisement

மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தையால்,
சுமார் 6 மணி நேரம் உற்பத்தி தடைப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் 100 ஏக்கர் பரப்பளவில்
மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொழிற்சாலை உள்ளது. கடந்த மார்ச்
21 ஆம் தேதி அதிகாலையில் அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த
தொழிலாளர்கள் சிலர் வயதான சிறுத்தை ஒன்று தொழிற்சாலைக்குள்
நடமாடிக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தொழிற்சாலையிலுள்ள எச்சரிக்கை அலாரத்தை
ஒலித்தனர். அலார ஒலியைக்கேட்டு அந்த ஷிப்டில் பணிபுரிந்துகொண்டிருந்த
தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி ஓரிடத்தில் கூடினர்.
தொழிற்சாலைக்குள் சிறுத்தை நடமாடும் தகவல் மகாராஷ்டிரா மாநில
வனத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் விரைந்து வந்து தொழிற்சாலையின் பாதுகாப்புப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். பின்னர், அங்கிருந்த தொழிலாளர்கள்
அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

வனத்துறைக் குழுவில் இருந்த 2 கால்நடை மருத்துவர்கள், தொழிற்சாலையின்
தரைத்தளத்தில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தை ஒன்று உலவுவதைக் கண்டுபிடித்தனர்.
அப்போது ஒரு பூனையைக் கொண்டுவந்து சிறுத்தைமுன் நடமாடச் செய்தனர்.

பூனையை விழுங்க வந்த சிறுத்தையைத் துப்பாக்கியில் மயக்க மருந்து
செலுத்தி வீழ்த்தினர். 6 மணி நேரமாக அங்கு உலவிக்கொண்டிருந்த சிறுத்தையைத்
தூக்கி கூண்டில் அடைத்து காட்டுக்குள் கொண்டுசென்று விட்டனர்.

முன்னதாக சிறுத்தையின் உடல்நலனையும் டாக்டர்கள் பரிசோதித்தனர்.

எவருக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி பிடிபட்டதால் தொழிலாளர்கள் நிம்மதிப்
பெருமூச்சு விட்டனர். ம்….சிறுத்தையும் ஆபத்தின்றித் தப்பியது.