கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு – DGP சைலேந்திர பாபு உத்தரவு

397

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த கனியாமூர் தனியார் பள்ளியில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.

மாணவி மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் பள்ளி மீது நடந்த தாக்குதல் சம்பவம் தனி வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மாணவி மரணம் தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரணை நடத்தும் என்றும் வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒரு தனிப்பட்ட பள்ளியில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை தனிப்பட்ட பார்வையில் பார்க்க வேண்டும் என்று கூறிய உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, எல்லா தனியார் பள்ளிகளிலும் இதுபோன்ற சூழல் கிடையாது என்று தெரிவித்தார்.

பள்ளி முதல்வர் அறையில் ஆணுறைகள் கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுகுறித்து விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று கூறினார்.