கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில், மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மாணவியின் உடலுக்கு நேற்று மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது. மறு பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் என மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் மறு பிரேத பரிசோனையில் பெற்றோர்கள் யாரும் உடன் இல்லாத நிலையில், உடலை வாங்கவும் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.