அரசு பேருந்தில் நூதன முறையில் டீசல் திருட்டு

237
Advertisement

கோவை மாவட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்படும் பேருந்துகளில் இருந்து டீசல் அடிக்கடி குறைவதாக  அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தது.இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக அன்னூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் பேருந்துகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது , பணிமனையில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளின் டீசல் டேங்கில் இருந்து டியூப் மூலம் டீசல் திருடிய ஊழியரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், அவர் பெரியசாமி என்பதும், அதே பணிமனையில்  பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இரவு நேரங்களில் பேருந்துகளின் டீசல் டேங்கில் இருந்து 20 லிட்டர் டீசல் திருடி எடுத்து செல்ல முயன்ற போது அதிகாரிகளிடம் சிக்கினார். இதையடுத்து அவரிடமிருந்து 20 லிட்டர் டீசல்  மற்றும் டீசல் திருட  பயன்படுத்தபட்ட பொருட்களையும்  பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை  பணியிடை நீக்கம் செய்தனர்.அரசு பேருந்து ஓட்டுனரே, அரசு பேருந்தில் இருந்து டீசல் திருடிய சம்பவம் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.