பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.

296

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை செயல்படுத்த மத்திய தொலைத் தொடர்பு துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன் 5G அலைக்கற்றை ஏலத்துக்கான ஒத்திகை நடைபெற்றது. 4G சேவையை விட, 5G சேவை 10 மடங்கு அதிகவேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வேகத்தின் காரணமாக, புதிய தலைமுறை சேவைகளும், புதிய வணிக மாதிரிகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 72 ஆயிரத்து 97.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் 4.5 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தை எடுக்க பெரும் நிறுவனங்களான அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே விண்ணப்பித்துள்ளதால் ஏலம் விரைவில் முடியும் என்று கூறப்படுகிறது. முன் வைப்பு தொகை அடிப்படையில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 14 ஆயிரம் கோடியும், ஏர்டெல் 5 ஆயிரத்து 500 கோடியும் முன் வைப்பு தொகையை செலுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன் வைப்பு தொகையை விட 10 மடங்கு கூடுதல் மதிப்பில் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க இந்த 2 நிறுவனங்களுக்கு உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.