கிணற்றுக்குள் இறங்கிப் பெண்கள் செய்த துணிகரம்

240
Advertisement

தண்ணீர் எடுப்பதற்காக தைரியமாகக் கிணற்றுக்குள் இறங்கிய
பெண்களின் வீடியோ நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதிப் பெண்களின் சோக நிலையை
வெளிச்சம்போட்டுக் காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்
தளங்களில் வைரலாகி வருகிறது.

நாசிக் பகுதியில் அமைந்துள்ள ரோஹிலே என்னும் கிராமத்தில்
அண்மைக்காலமாகத் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவிவருகிறது.
அங்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு
சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது.

இதனால், அங்கு கிணற்றுக்குள் இறங்கித் தண்ணீர் எடுக்கும்
நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெங்காய விளைச்சலுக்குப்
பெயர்பெற்ற அந்தப் பகுதியில்தான் இந்த அபாய நிலை நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் தங்கள் கிராமத்திலேயே உள்ள ஓர் ஆழமான
கிணற்றில் சொற்பமாக உள்ள தண்ணீரைப் பயன்படுத்த இல்லத்
தரசிகள் முடிவுசெய்தனர்.

அதைத் தொடர்ந்து கிணற்றுக்குள் 2 பெண்கள் இறங்கி அதிலுள்ள
இரும்பு ஏணியில் நின்றவாறே பிளாஸ்டிக் வாளியில் தண்ணீரை
நிரப்பி அனுப்புகின்றனர். கயிற்றில் கட்டப்பட்டுள்ள அந்தத் தண்ணீர்
வாளியை கிணற்றுக்கு வெளியேயுள்ள பெண்கள் மேலே இழுத்துத்
தண்ணீர் குடத்தில் ஊற்றுகின்றனர். இப்படித் தண்ணீர் இறைக்கும்
போது சிலநேரங்களில் சில பெண்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்து
விடுவதும் உண்டு.

மிகவும் ஆபத்தான இந்தச் செயலில் பெண்கள் ஈடுபட்டுள்ளது
பரிதாபமாக அமைந்துள்ளது. அதேசமயம் தங்கள் குடும்பத்துக்காக
உயிரைப் பணயம் வைத்து செயல்படும் தாய்மை உள்ளங்களைப்
பார்த்துப் பிரம்மிப்பும் ஏற்படுகிறது.

குடிதண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க சம்பந்தப்பட்ட அரசு
அதிகாரிகள் முன்வருவார்களா என்னும் கேள்வி சமூக வலைத்
தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.