கத்தார் நாட்டில் வேலை செய்து வரும் சையத் என்பவரிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களிடம் ஹெராயின் போதைப் பொருள் இருப்பதாக கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளனர். இதனையடுத்து சென்னை மாதவரத்தில் தான் சொல்லும் கடைக்குச் சென்று ஹெராயினுடன் காத்திருக்குமாறும் தான் அனுப்பும் நபர்கள் வந்து பணத்தை கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்வார்கள் என சையத் கூறியுள்ளார்.
ஹெராயினுடன் மாதாவரதில் ஒரு கடையில் சிலர் காத்திருந்தபோது கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்நபர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜா (40), அருண்குமார்(31), தமீம் அன்சாரி(27), முகமது சபி(29) என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்த ஒரு கிலோ ஹீரோயினை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்தபோது, அது உண்மையான ஹெராயின் இல்லை என்பதும் யூரியாவை பொடிசெய்து ஹெராயின் எனக்கூறி மோசடி செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து 4 நபர்களையும் கைது செய்து விசாரணை தொடர்கிறது.