இன்று நடைபெறுகிறது தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு

188

தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, TNPSC மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 18 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெறுகிறது.

இதற்காக 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத உள்ளனர். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில், கொள்குறி வகையில் வினாக்கள் அமைய உள்ளது. காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.