Wednesday, December 11, 2024

70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி

70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

குஜராத் மாநிலம், கட்ச் அருகேயுள்ள மோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மல்தாரி-ஜிவுபாஹென் ராப்ரி தம்பதியினர். 45 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் ஓராண்டில் குழந்தைப் பேறு என்பதுதானே இந்திய மரபாக உள்ளது. அதுபோலவே இந்தத் தம்பதியும் குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், மகப்பேறு வாய்க்கவில்லை. இதனால் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகினர். பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகினர். 45 ஆண்டுகளாகியும் சந்தான பாக்கியம் கிட்டவில்லை.

அந்த நேரத்தில்தான் உறவினர் ஒருவர் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதைக் கேள்விப்பட்டனர். அந்தத் தகவல் 75 வயதான மல்தாரிக்கும் அவரது 70 வயது மனைவி ஜிவுபாஹென் ராப்ரிக்கும் தேனாய் தித்தித்தது. அந்தத் தம்பதிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

அதனால் தாங்களும் ஐவிஎஃப் என்னும் செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனர். IN VITRO FERTILISATION என்னும் முறையில் 12 மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பலனாகத் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றிக்கூறிய ராப்ரி,

எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் எங்களுக்கு குழந்தையைக் கொடுத்திருக்கிறார். இது கடவுளின் குழந்தை. குழந்தைக்கு லாலோ எனப் பெயர் சூட்டியிருக்கிறோம் என்கிறார்.

மருத்துவமனையில் இருந்து இந்தத் தம்பதி தங்கள் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பியபோது கிராமத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சையளித்த மகப்பேறு மருத்துவர் நரேஷ் பானு சாலி கூறியதாவது,

நான் பல ஆண்டுகளாக மருத்துவம் செய்துவருகிறேன். ஆனால், இந்தக் குழந்தை பிறந்ததும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்தி ஏற்பட்டது., நான் மட்டுமல்ல, மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்கிறார்.

மருத்துவ வளர்ச்சி வயதான இந்தத் தம்பதியினருக்கு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!