சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கவிபாரதி- சுமித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நண்பர்கள் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 கிலோ வெங்காயம், 2 கிலோ தக்காளி, இரண்டு லிட்டர் பெட்ரோல், இரண்டு லிட்டர் டீசல் ஆகியவற்றை திருமணப் பரிசாக வழங்கிப் புதுமணத் தம்பதியையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளனர் மணமக்களின் நண்பர்கள்.
தற்போது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து தினந்தோறும் அதிகரித்தும் வருகிறது. அதேபோல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை இப்படித் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், அனைத்துத் தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர். விலை உயர்வு இப்படித் தொடர்ந்துகொண்டேபோனால், பெட்ரோல், டீசல், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாது. வெறும் பரிசுப் பொருட்களாக மட்டுமே அளிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை உணர்த்தும்விதமாக மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் பரிசளித்துள்ளனர்.
நண்பர்களின் இந்தச் செயல், மணமக்களுக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
விலை உயர்வைக் கிண்டல் செய்யும் விதமாக நண்பர்களின் இந்தச் செயல் அமைந்திருந்தாலும், வாழ்க்கையில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக வலைத்தளவாசிகள் கருதுகின்றனர்.
இதேபோல் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் நடைபெற்ற ஏ- ஆன்ட்ஸ்கியூ- ஏ- புரோனோஷா ஆகியோரின் திருமணத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல், ஒரு லிட்டர் டீசல் ஆகியவற்றை மணமக்களுக்கு வழங்கி நண்பர்கள் திருமண விழாவை கலகலப்பாக்கியுள்ளனர்.
சில மாதங்களுக்குமுன்பு நிகழ்ந்த இந்த திருமணப்பரிசுகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.