ஒவ்வோராண்டும் ஜுன் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை
தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சில நாடுகளில் ஜுன் 20 ஆம் நாள் தந்தையர் தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
தாயன்புக்கு நிகரானது தந்தையின் அன்பு. இதனை
உணர்ந்துகொண்ட வாஷிங்டனைச் சேர்ந்த சொனாரா
லூயிஸ் ஸ்மார்ட் டாட் தந்தையர் தினம் கொண்டாட
வேண்டும் என்று 1909ல் கோரிக்கை வைத்தார். அதற்குக்
காரணம், அவரது தந்தைதான்.
தன் தாய் இறந்தவுடன், தன்னுடன் பிறந்த 5 சகோதரர்களையும்
தந்தையே கடும் சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாகப் பராமரிப்பதை
நன்குணர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தந்தையைக் கௌரவிக்கும்விதமாக
தந்தையர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்று சர்ச்சில்
மத குருமார்களிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை
ஏற்கப்பட்டு 1910 முதல் தந்தையர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது.
1972ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன்,
தந்தையர் தினத்தை அந்நாட்டின் தேசிய விடுமுறை தினமாக
அறிவித்தார்.
தற்போது உலகில் 52க்கும் அதிகமான நாடுகள் தந்தையர்
தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.
மேலை நாடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான்
தந்தையின் அருமையை உணரத் தொடங்கினாலும்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்தையின்
சிறப்பை அருமையாகக் கூறியுள்ளார் ஐயன் திருவள்ளுவர்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
தந்தை தன் மகவுக்குச் செய்ய வேண்டிய முதல் கடமை
அவனைக் கல்வியில் சிறந்தவன் ஆக்குவதே என்கிறார்.
அதேசமயம் தன்னை சிறந்த கல்விமானாக உருவாக்கிய
தந்தையை மகன் எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும்
என்பதையும் கூறியுள்ளார்.
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல்
மகனின் அறிவாற்றலையும் நற்குண செயல்களையும்
கண்டவர் இவனுடைய தந்தை எத்தகைய கடுந்தவத்தைச்
செய்தானோ என வியந்து சொல்கிற சொற்களைப்
பிள்ளைகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
ஈன்று புறந்தள்ளுதல் என் தலைக்கடனே சான்றோன்
ஆக்குதல் தந்தைக்கு கடனே எனப் புறநானூறு கூறுகிறது.
மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் என் கடனாகும். அவனை
நற்பண்புகள் நிறைந்தவனாக்குவது தந்தையின் கடமையாகும்.
நம்மை சான்றோனாக்கியுள்ள தந்தையைப் பெருமை
இந்த நன்னாளில் நினைவுகூர்வோம். பெருமை கொள்வோம்.
பிரதிபலன் எதிர்பாராது நம்மை சான்றோனாக்கிய தந்தையை
அவரின் வயதான காலத்தில் குழந்தையைப்போல் பேணிக்காத்து
அவரது அன்பையும் அறிவையும் அனுபவத்தையும் வழிகாட்டுதலையும்
வாழ்த்துகளையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.