7 ஆண்டுகளில் 4 மடங்கு லாபம் சம்பாதித்த விவசாயி

457
Advertisement

பங்குச் சந்தை, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுசெய்து இரட்டிப்பு லாபம் பெறுவதைவிட விவசாயத்தில் முதலீடுசெய்த நான்கு மடங்கு லாபம் சம்பாதித்து நம்பிக்கையூட்டியுள்ளார் விவசாயி ஒருவர்.

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயத் தொழில்தான் இருந்துவருகிறது. ஆனால், தங்கள் விளைபொருட்களுக்குத் தாங்களே விலை நிர்ணயம் செய்யமுடியாத காரணத்தால் விவசாயிகள் பெரும்பாலானோர் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
அதனால்தான் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்று சொல்வார்கள்.

இந்நிலையில், உழவர்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக அந்த விவசாயி மேற்கொண்டுள்ள விவசாயப் பணிகளைப் பார்ப்போம்….

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டம், லக்கிம்பூர் நகராட்சிப் பகுதிக்குட்பட்ட சகேது என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திர வர்மா.

நேபாள எல்லையிலுள்ள இந்தப் பகுதி முழுவதும் வேளாண்மைக்குப் புகழ்பெற்றதாகும்.
BA., LLB., பட்டதாரியான இவர் தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டார்.

ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் 234 மூங்கில் செடிகளை நடவுசெய்தார். அவற்றோடு இணைப் பயிராகக் கரும்பையும் பயிட்டார். மேலும், ஊடுபயிராக நெல், கோதுமை ஆகியவற்றைப் பயிரிட்டு நிறைய லாபம் சம்பாதிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையே மா, லிச்சிப் பழம், எலுமிச்சை ஆகிய தோட்டப் பயிர்களையும் ஊடுபயிராகப் பயிரிட்டார். தற்போது எல்லாப் பயிர்களையும் அறுவடைசெய்து சம்பாதித்துவிட்டார். நான்காண்டுகளுக்குப் பிறகு மூங்கில் செடிகள் அனைத்தும் மரங்களாக வளர்ந்துவிட்டன.

ஒவ்வொரு மூங்கில் செடியும் சராசரியாக 22 அடி உயரமுள்ள மரமாக வளர்ந்துள்ளது. ஒரு மூங்கில் மரத்தில் 50 கழிகள் உள்ளன. ஒரு கழி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தக் கணக்கின் அடிப்படையின் ஒரு மூங்கில் மரத்தின் மதிப்பு 7 ஆயிரத்து 500 ரூபாய் ஆகிறது.

234 மூங்கில் செடிகளும் நான்காண்டுகளில் மரங்களாக வளர்ந்துவிட்டன. அவற்றின் மதிப்பை இந்த அடிப்படையில் கணக்கிட்டால் 17 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வருகிறது-
இந்தத் தொகை பங்குச் சந்தையில் முதலீடுசெய்து கிடைப்பதைவிட அதிகமான தொகையாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார் சுரேஷ் சந்திர வர்மா.

பொதுவாக, மூங்கிலைப் பச்சைத் தங்கம் என அழைப்பார்கள். இங்கே பணமாகவே வளர்ந்துவிட்டனவோ மூங்கில் மரங்கள்…?