விலையுயர்ந்த விவாக ரத்து… முன்னாள் மனைவிக்கு 5,500 கோடி

469
Advertisement

துபாய் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் தனது 6 ஆவது மனைவியை விவாகரத்து செய்வதற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டானிய வரலாற்றிலேயே இது விலையுயர்ந்த விவாகரத்தாகக் கருதப்படுகிறது.

துபாய் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் முகம்மதுவின் 6 ஆவது மனைவி இளவரசி ஹயா பின்ட் அல் ஹுசைன். இவர் ஜோர்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஹுசைனின் மகள். தற்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 14 வயதில் மகள், ஒன்பது வயதில் மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துவரும் இளவரசி விவாகரத்து கேட்டு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷேக் முகம்மதுவுக்கு 730 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 5 ஆயிரத்து 509 கோடி) தொகையை ஜீவனாம்சமாக அவரது முன்னாள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வழங்குமாறு டிசம்பர் 21 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வருட சட்டப் போராட்டம் இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

பிரிட்டன் நீதிமன்ற வரலாற்றில் மிக விலை உயர்ந்த விவாக ரத்தாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.