தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டன.
மூன்று வழக்குகளிலும் தற்போது ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில், இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். திமுக அரசுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி வந்த அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், ஜெயக்குமாரை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தனர். ஜெயக்குமாரிடம் நலம் விசாரித்த இருவரும் அவருடன் நீண்ட நேரம் உரையாடினர்.அப்போது, உடன் சில முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.