Wednesday, December 4, 2024

குறைவாக சாப்பிடுங்கள்… எச்சரித்த வடகொரிய அதிபர்

2025 வரை குறைவாக சாப்பிடுங்கள் என்று வடகொரிய மக்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவுடனான எல்லையை 2020 ஆம் ஆண்டில் வடகொரியா மூடியது. இதனால், வடகொரியாவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுவரும் வடகொரிய மக்களுக்கு அரசின் இந்த எச்சரிக்கை அதிர்ச்சியளித்துள்ளது.

இதற்கிடையே சுயசார்புக் கொள்கையை வடகொரிய அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. விளைச்சலைப் பெருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

வடகொரியாவில் 8 லட்சத்து 60 ஆயிரம் டன் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகொரியா கடுமையான வெள்ளத்தால் பாதித்தது. பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதிப்புக்கு உள்ளாகினர்.

மோசமான வடிகால், காடுகள் அழிப்பு, பாழடைந்த உட்கட்டமைப்பு போன்ற காரணங்களால் கோடைமழை வடகொரியாவைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன்காரணமாக விவசாயமும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.

வடகொரியா மலைப்பாங்கான நாடு. விவசாயத்துக்கேற்ற நிலம் அங்கு குறைவாகவே உள்ளது. விவசாயம் செய்வதற்கும் போதிய வேளாண் கருவிகள் கிடைக்கவில்லை என்பதும் பெருங்குறையாக உள்ளது. அதனால், மூன்றில் ஒரு மக்கள் இறக்குமதி உணவுப் பொருட்களையே நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐந்தில் இரண்டு பங்கு மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா சபை அறிக்கை கூறியுள்ளது. மூன்றில் ஒருபங்கு மக்கள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களை வருத்தமடைய வைத்துள்ளது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!