https://www.instagram.com/reel/CQi9-hxhnWd/?utm_source=ig_web_copy_link
சேலையுடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பெண் டாக்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த 39 வயதான டாக்டர் ஷர்வாரி இனாம்தார் சேலையுடுத்தி ஜிம்முக்குச் சென்று எடை தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிசெய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவரான ஷர்வாரி ஒர்க் அவுட் செய்வதற்கென்று தனியான உடையுடுத்தாமல், பாரம்பரியமான சேலையுடுத்தி வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் வசதியாக இருப்பதாக உணர்கிறார்.
இதுபற்றிக்கூறிய அவர்,
ஓராண்டாக வீட்டிலேயே உடற்பயிற்சி செய்துவந்தேன். கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜுன் மாதம் முதன்முறையாக ஜிம்முக்குச் சென்று ஒர்க் அவுட் செய்ய விரும்பினேன். அந்த நாள் எனக்கு கொண்டாட்டமாக இருக்க விரும்பினேன்.
அதற்காகப் பண்டிகை மற்றும் குடும்ப விஷேசங்களின்போது உடுத்தக்கூடிய மராத்தியப் பாரம்பரியப் புடவையுடன் மூக்குத்தி மற்றும் சில நகைகளை அணிய முடிவுசெய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு டீனேஜ் குழந்தைகளின் தாயான ஷர்வாரி உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்திவருவது சக பெண்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. ஜிம் பயிற்சிகளுடன் யோகாசனம் செய்தல், சைக்கிள் ஓட்டுதல் ஆகிய பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ஜிம்முக்குச் செல்லும் பழக்கம் உள்ள ஷர்வாரியின் கணவர், தன் மனைவி உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காகத் தன்னோடு வரும்படி அழைத்துள்ளளார். என்றாலும், குழந்தைகள் வளர்ந்த பிறகே உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் ஷர்வாரி,
2017 ஆம் ஆண்டில் பவர் லிஃப்ட் போட்டியில் மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கமும், 2018 ஆம் ஆண்டில் தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியதற்காக வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார் ஷர்வாரி.
தற்போது உண்மையான வயதைவிட 10 வயது இளமையாக உணர்கிறேன் என்று கூறுகிறார் இந்த நம்பிக்கைப் பெண்மணி.