தவிட்டிலிருந்து தண்ணீர் கப்

365
Advertisement

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரிசித் தவிட்டிலிருந்து தண்ணீர் கப் உள்ளிட்ட பல பொருட்கள் தமிழகத்தில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அரிசித் தவிட்டைக்கொண்டு செய்யப்பட்டுள்ள டம்ளர், சாப்பாட்டுத் தட்டு, டிபன் பாக்ஸ், தண்ணீர் ஜக் போன்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் தட்டு, கேரி பேக் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருளாக பாக்கு மட்டையில் செய்யப்படும் தட்டு, பேப்பர் கப் போன்றவை ஏற்கெனவே பிரபலமாக உள்ளன.

தற்போது அரிசித் தவிட்டிலிருந்தும் டம்ளர், சாப்பாட்டுத் தட்டு, டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளனர். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாக அமையும் என்பதோடு, நெல் பயிரிடும் விவசாயிகளின் வருமானம் பெருகவும் உதவும்.

நெல்லில் இருந்து உமியைப் பிரித்து, பிறகு அரிசியைத் தீட்டும்போது வெளிவரும் தவிடு சிறந்த சத்தான உணவு. மாடுகளுக்கு இந்த அரிசித் தவிடுதான் முதன்மையான உணவு. அரிசித் தவிட்டில் விட்டமின் ஏ, பி, பி12, கே, இ ஆகிய உயிர்ச்சத்துக்களும், மாவுச்சத்துகளும் புரதச்சத்துகளும் நிரம்பியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரிசித் தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரிசித் தவிட்டிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலான டம்ளர், தட்டு போன்ற பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

இந்த டம்ளரில் நீர் ஊற்றிப் பருகினால் உடலுக்கும் ஆரோக்கியம் கிட்டும் என்னும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.