சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…முழு ஊரடங்கில் மக்கள்

422
Advertisement

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரியளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் கொரோனா பரவல் படு வேகமெடுத்துள்ளது.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,393 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லாததால் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டும் பெய்ஜிங்கில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஷாங்காய் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வடகிழக்கு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் வடகொரியா எல்லையில் உள்ள ஹுன்ஷுன் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.