மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர்

443
Advertisement

குமரி மாவட்டத்தில், தனியார் கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்,கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவிக்கு, அக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர், கல்லூரிக்குள் புகுந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பேராசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணவியின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, கல்லூரியில் இருந்து அந்த மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.