சிங்கிள்ஸ் தினம் கொண்டாடி சீனா அசத்தியுள்ளது.
ஒவ்வோராண்டும் நவம்பர் 11 ஆம் நாள் சீனாவில் சிங்கிள்ஸ் தினம் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் திருவிழாபோல் கொண்டாடப்படுவதுடன், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் விழாவாகவும் மாறியுள்ளது.
Bachelors தினமே சிங்கிள்ஸ் தினமாக மாறியுள்ளது.
சீனாவில் அதிகாரப் பூர்வமற்ற விடுமுறை நாளாக இந்த தினம் உள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இந்த தினத்தன்று விடுமுறை அளித்துவிடுகின்றன. இந்த நாளில் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேச்சலர்கள் வாங்கி மகிழ்கின்றனர்.
தனிமையைக் கொண்டாடுவதற்கான வழியாக இந்த நாள் இருந்தாலும், பேரம்பேசி பொருட்களை வாங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த நாளில் வர்த்தக நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தள்ளுபடியை வழங்குகின்றன.
2020 ஆம் ஆண்டு சிங்கிள்ஸ் நாளில் மட்டும் 115 பில்லியன் டாலர் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றதாகவும், அதன்மூலம் 800 மில்லியன் சிங்கிள்ஸ் பயன் அடைந்ததாகவும், ஒரு விநாடிக்கு 2 லட்சத்து 56 ஆயிரம் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
ஒற்றையர் தினக் கொண்டாட்டம் தொடங்கியதன் பின்னணி சுவாரஸ்யமானது….
1993 ஆம் ஆண்டு நான்ஜிங் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகத் தங்கியிருந்த நான்கு நண்பர்கள், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் மனிதர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்கள் தினம் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அது பல்கலைக் கழகம் முழுவதும் பரவியது. பின்னர் சீனா முழுவதும் பரவி சமூக விழாவாக மாறியுள்ளது.
சிங்கிள்ஸ் டே பற்றி இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. காதலர் தின எதிர்ப்பு தினமாக 1990 முதலே ஒற்றையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறப்படுவதுதான் அது.