செஸ் ஒலிம்பியாட்: தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.

265

செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே தலைவர் அர்கெடி டிவார்கோவிச், போட்டியின் இயக்குநர் பரத் சிங் சவுகான், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், செஸ் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இந்திய செஸ்விளையாட்டின் தந்தையும், முதல் கிராண்ட் மாஸ்டருமான மானுவல் ஆரோன் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார். நிறைவு விழாவில் டிரம்ஸ் சிவமணி, வீணை ரமேஷ் வைத்யா, புல்லாங்குழல் நவீன், பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி ஆகியோர் இணைந்து “இந்தியாவின் இதயம்” என்ற தலைப்பில் இசைநிகழ்ச்சியை நடத்தினர். செம்மொழியாம் தமிழ்மொழியாம் பாடலை இசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டிரம்ஸ் இசைத்து மக்களை உற்சாகப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பறக்கும் டிரம்ஸ் மற்றும் பியானோ இசை நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மக்களின் மனதை மயக்கும் “பறக்கும் பியானோ இசை நிகழ்ச்சியில், பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடல், ரசிகர்களின் வாழ்த்தொலிகளுக்கு இடையே வாசிக்கப்பட்டது.

இதையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன்படி, செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு, செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப் பதக்கத்தையும், குதிரை வடிவம் கொண்ட தம்பி நினைவு பரிசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் 2வது இடம் பிடித்த அர்மேனியா அணிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய B அணி 3வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றது. குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் அடங்கிய இந்திய B அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.