மீதமுள்ள சமையல் எண்ணெயிலிருந்து வாகனங்களுக்கு சார்ஜ்

359
Advertisement

பயன்படுத்திய பின் வீணாகக் கருதப்படும் சமையல் எண்ணெயிலிருந்து வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருள் விலை உலகம் முழுவதும் தினமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயிலிருந்து மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் நுட்பம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தெற்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு இடைப்பட்டது நுல்லார்போர் பகுதி. 684 மைல்கள் தொலைவு கொண்ட இந்தப் பகுதியைக் கடந்துசெல்ல 24 மணி நேரமாகும்.

இந்தத் தொலைவைக் கடக்க நான்குமுதல் ஆறு மணி நேரம் பேட்டரியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தப் பகுதியில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் நிலையங்கள் எதுவும் இல்லாததால், மின்சார வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த ஓய்வுபெற்ற பொறியாளரான ஜான் எட்வர்ட், கார்பன் நியூட்ரல் எனப்படும் பயோ எரிபொருளைக் கண்டுபிடித்துள்ளார். இதற்காக, உணவகங்களில் பயன்படுத்தியபின் வீணாகக் கொட்டப்படும் சமையல் எண்ணெயை வாங்கி, அதனைக்கொண்டு மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் முறையை உருவாக்கியுள்ளார்.

இந்த எரிபொருள்மூலம் ஒரு கப் காபி பருகும் நேரத்துக்குள் வாகனப் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் முழுமையான சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

இதனால் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களும் வாகன ஓட்டிகளும்.

டீசல் மற்றும் இதர எரிபொருட்களைவிட இந்த கார்பன் நியூட்ரல் எரிபொருளின் மாசு குறைவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.