காதலை முறித்துவிட்ட காதலனைத் தன்னோடு சேர்த்து
வைப்பதற்காக மந்திரவாதிக்கு நான்கரை லட்ச ரூபாய்
செலவு செய்தும் அது நிறைவேறாததால், கொடுத்த பணத்தைத்
திரும்பக்கேட்ட காதலிக்கு கொலைமிரட்டல் விடுத்த மந்திரவாதியை
மும்பைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி ஒருவனைத்
தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். இருவரது காதலும்
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக நன்கு
வளர்ந்து வந்துள்ளது.
யார் கண்பட்டதோ தெரியவில்லை காதலுக்கு குட்பை
சொல்லிவிட்டான் காதலன்.
காதலியால் இந்தப் பிரேக் அப்பைத் தாங்கிக்கொள்ள
முடியவில்லை. அடைந்தால் காதலன்…இல்லையேல் காலன்
என்கிற அளவுக்கு வெறித்தனமாக லவ்வியுள்ளார். என்ன
செய்தாவது காதலனோடு சேர்ந்துவிட துடித்த அப்பெண்
யாரோ கொடுத்த ஐடியாவால் மந்திரவாதி ஒருவரை நாடியுள்ளார்.
மந்திரவாதியோ, ” உன் காதலனோடு உன்னை சேர்த்து வைக்கிறேன்.
இதற்கான சடங்கு செய்ய வேண்டும். ஒரு ஆயிரம் ரூபாய் கொண்டு வா”
என்றிருக்கார். ஒரு கணமும் தாமதிக்காமல் ஆயிரம் ரூபாயைக்
கொடுத்துள்ளார் அப்பெண்.
சில நாட்கள் கழித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மறுபடியும்
மந்திரவாதியை சந்தித்தார். ”கங்கையிலிருந்து நீர்கொண்டுவந்து
பூஜைசெய்தால் உன் காதலன் உன்னைத் தேடி வந்துவிடுவான்.
இதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும்” என்று சொல்ல,
உடனே அத்தொகையைக் கொடுத்துள்ளார்.
இப்படியே காதலுக்காக, காதலனுக்காக 4 லட்சத்து 57 ஆயிரம்
ரூபாயை மந்திரவாதிக்கு கொடுத்துள்ளார்.
ஆனாலும், காதலன் தன்னைத் தேடிவராததால், கொடுத்த பணத்தைத்
திரும்பத் தரும்படிக் கேட்டுள்ளார். மந்திரவாதியோ, ”பணத்தைத்
திரும்பத் தரமுடியாது- மறுபடியும் பணத்தைக் கேட்டு வந்தே…கொன்று
விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
அதற்கப்புறம் பெண்ணுக்கு ஞானோதயம் வந்துவிட்டது; காவல்துறையில்
புகார் செய்தார். துரித நடவடிக்கை எடுத்த காவல்துறை மந்திரவாதியைக்
கைதுசெய்துள்ளது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண்ணை மறைத்த இந்தக்
காதல் பெருந்தொகையை செலவுசெய்ய வைத்துள்ளது.
காதலன்மீது எந்தளவுக்கு ஈர்ப்பு இருந்தால் அப்பெண் இந்தளவுக்குப்
பணம் செலவு செய்திருப்பாள் என்று வியக்கின்றனர் இளைஞர்கள்.
இப்படியொரு பெண் தனக்கு காதலியாக வாய்க்கவில்லையே என்று
90ஸ் கிட்ஸ் ஒவ்வொருவரும் தவிப்பில் உள்ளனர்.