தோழிகளான இரண்டு டாக்டர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ள விஷயம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
சமீபகாலமாக விநோதத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆணும் ஆணும் திருமணம் செய்துகொண்டதும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதும் சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.
இதில், இன்னொரு விசித்திரமாக மருத்துவர்களான இரண்டு தோழிகள் ஒருவரையொருவர் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மருத்துவர்களான நாக்பூரைச் சேர்ந்த சுர்பி மித்ரா, பரோமிதா முகர்ஜி ஆகிய இருவரும் இந்த ஆண்டு இறுதியில் கோவாவில் தங்கள் திருமணத்தை நடத்த முடிவுசெய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கொல்கத்தாவில் ஒரு மனநல மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்தனர். முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் காதல் நெருப்பு பற்றிக்கொண்டது.
பிறகென்ன?
மாநாடு முடிந்தாலும் இவர்களின் காதல் தொடர்ந்தது. அந்தக் காதல் உறவு கல்யாண உறவாகவும் மலரத் தொடங்கியுள்ளது.
இதுபற்றிக்கூறியுள்ள பரோமிதா முகர்ஜி, 2013லிருந்தே எனது பாலியல் சார்பு என் அப்பாவுக்குத் தெரியும். என் அம்மாவிடம் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார். என்றாலும், நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்களின் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார் என்கிறார்.
அவரது இணையான சுர்பி மித்ராவுக்கு அவரது பெற்றோர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையாம்..
இந்தியாவில் ஒரே பாலினத் திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரம் இல்லையெனினும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தங்கள் உறவைக் கொண்டாடுவதைத் தடுக்கவில்லை. என்றாலும், மருத்துவர்களே இத்தகைய செயலைச் செய்யத் துணிந்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.