பெட்ரோல் விலை விண்ணைத் தொடுமளவுக்கு
உயர்ந்து வருவதாலும், உடல் ஆரோக்கியம் பற்றிய
விழிப்புணர்வு அதிகரித்து வருவதாலும் பலரும்
சைக்கிளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில், நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களும்
உண்டு. இதற்காக கியர் சைக்கிள், பேட்டரி சைக்கிள்
போன்றவற்றை நாடத் தொடங்கியுள்ளனர்.
அவர்களின் ஆர்வத்தையும் தேவையையும்
பூர்த்திசெய்யும் விதமாகப் பல்வேறு மாடல்களில்
சைக்கிள்களைப் பல்வேறு நிறுவனங்கள்
தயாரிக்கத் தொடங்கியுள்ளன.
இங்கிலாந்தைச் சேர்ந்த கோஸிரோ மொபிலிட்டி
என்கிற நிறுவனம் அண்மையில் பேட்டரி சைக்கிள்
ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் 400 வாட்
லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 3 மணி
நேரமாகும் என்று இந்நிறுவனம் கூறுகிறது.
ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 70 கிலோமீட்டர்
தொலைவு பயணிக்கலாம்.
இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் உள்ளது.
அகலமான டயர்கள் கொண்டுள்ள இந்த சைக்கிள்
முன்புறம் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய சஸ்பென்ஸன்
உள்ளது. 7 கியர்கள் உள்ளன.
இந்த சைக்கிளின் விலை ரூ 34 ஆயிரத்து 999.
மாடலுக்கேற்ற விலையில் இந்த பேட்டரி
சைக்கிள் உள்ளது.
ஸ்கெல்லிங் புரோ, ஸ்கெல்லிங், ஸ்கெல்லிங்
லைட், ஒன், மைல் என ஐந்து மாடல்களில்
வெவ்வேறு விலையில் கிடைக்கிறது.
இந்தியாவில் கொல்கத்தாவில் இதன் தயாரிப்புத்
தொழிற்சாலையும் டெல்லியில் ஒருங்கிணைந்த
தலைமை அலுவலகமும் உள்ளது.