32 ஆண்டுகளாக மனைவியின் கலசத்துடன் வாழும் முதியவர் இணையத்தை ஈர்த்துவருகிறார்.
பீகார் மாநிலம், சீமாஞ்சல் மாவட்டத்தில் வசித்துவருபவர் போலோ நாத் அலோக். அவரது மனைவி பத்மா ராணி 32 ஆண்டுகளுக்குமுன்பு இறந்துவிட்டார். மனைவி உயிருடன் இருக்கும்போது ஆழமாக நேசித்த போலோ நாத்தால், அவரது பிரிவைத் தாங்கமுடியவில்லை. அதனால், மனைவி இறந்த பிறகு, தனியாக இருக்க விரும்பாத போலோ நாத், அவரது அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்து தன்னோடு வைத்துக்கொண்டார்.
பின்னர், அந்தக் கலசத்தைப் பாதுகாத்துத் தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தில் தொங்கவிட்டுள்ளார். அந்தக் கலசத்துக்குத் தினமும் ரோஜா மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்துவருகிறார். இப்படித் தொடர்ந்து 32 ஆண்டுகளாக மனைவியின் நினைவைப் போற்றி வருகிறார்.
தான் இறக்கும்போது மனைவியின் அஸ்தியையும் சேர்த்துத் தகனம் செய்யும்படி குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் போலோ நாத் அசோக்.
தற்போது 90 வயதாகும் போலோ நாத்தின் மனைவி மீதான தீராக் காதல் மனித இதயங்களை வருடிவருகிறது.
இந்தக் காலத்தில் இத்தகையான அன்பை கணவன் மனைவிக்கிடையே காண்பது அரிதாகவே உள்ளது. உண்மையான அன்பின் சின்னம் என்று உள்ளம் உருகிப் பதிவிட்டுவருகின்றனர் வலைத்தளவாசிகள்.