சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழப்பு

201

சென்னை மெரின கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில், 8 மாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்தை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.

சென்னை காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற, லதா என்ற 8 மாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்தை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். இந்த விபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.