வழக்கம்போல பட்ஜெட்டில் அல்வா கொடுத்துள்ளார்கள்
ஜெயக்குமார் கிண்டல்

326
Advertisement

தமிழகப் பட்ஜெட்டைக் கிண்டல்செய்து விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக தொண்டரைத் தாக்கிய வழக்கில் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் வாரத்திற்கு 3 நாட்களில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில், அங்கு கையெழுத்திட்ட பிறகு, 2022- 2023 ஆம் ஆண்டு தமிழக வரவு- செலவுத் திட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறிய அவர்,
என்மீது கொரோனா பரவக் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அப்போது 10 ஆயிரம் பேரைக் கூட்டியபோது கொரோனா வரவில்லையா? அதிமுக தொண்டர்களின் எழுச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் எதையும் செய்வார்கள்.

தமிழக கவர்னரைத் திரும்பப் பெறவேண்டும் என்று டெல்லியில் வற்புறுத்துவார்கள். ஆனால், இங்கே மு.க.ஸ்டாலின் கவர்னரைப் போய் சந்திப்பார்.

திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வழக்கம்போல பட்ஜெட்டில் அல்வா கொடுத்துள்ளார்கள்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலைதான் திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருக்கிறது என்று கிண்டலாகக் கூறினார்.