அரசு அதிகாரியாக நடித்து 7 மாநிலங்களில் 14 பெண்களைத் திருமணம் செய்து டாக்டர் ஒருவர் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
ஒடிசா மாநிலம், கேந்திரபாதி மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது ஹோமியோபதி டாக்டர் ஒருவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். ரமேஷ் சந்திர ஸ்வைன், பித்து பிரகாஷ் ஸ்வைன், ரமணி ரஞ்சன் ஸ்வைன் போன்ற பெயர்களில் பல பெண்களை அவர் மணந்துள்ளார். கடந்த ஆண்டு, ஜுலை மாதத்தில் டில்லியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் அளித்த புகாரின்பேரில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் ஜெனரல் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அந்த டாக்டர், 2018 ஆண்டில் டில்லியிலுள்ள அந்தப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அறிந்து காவல்துறையில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அந்தக் கல்யாண மன்னனைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில் அவர் மொத்தம் 14 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1982 ஆம் ஆண்டில் முதல் திருமணம் செய்துள்ளார். அந்த மனைவிமூலம் 5 குழந்தைகள் உள்ளனர். 2002 ஆம் ஆண்டில் 2 ஆவது பெண்ணைத் திருமணம் செய்தார். 2 ஆவது மனைவி பஞ்சாபில் உள்ள மத்திய ஆயுதப் காவல் படை அதிகாரி. அவரிடமிருந்து 10 லட்ச ரூபாயை ஏமாற்றிப் பறித்துள்ளார்.
ஹோமியோபதி டாக்டர் ஸ்வைனின் வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11 ஏடிஎம் கார்டுகள், வெவ்வேறு அடையாளங்களுடன் 4 ஆதார் அட்டைகள், வெவ்வேறு முகவரிகளுடன் பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டில் 13 வங்கிகளில் 1 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கேரளப் போலீசாரால் டாக்டர் ஸ்வைன் கைதுசெய்யப்பட்டார். ஹைதராபாத்தில் முதியோர் இல்ல உரிமையாளர், மாணவர்கள் உள்பட பலரிடம் 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளார்.
பணம் பறிப்பது, திருமணம் செய்த பிறகு அந்தப் பெண்களின் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிடுவது போன்ற செயல்களில் டாக்டர் ஸ்வைன் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் திருமணம் செய்த பெண்களுள் வக்கீல்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், உயர்கல்வி கற்ற பெண்களே அதிகம்.
மேட்ரிமோனியல் இணைய தளங்கள்மூலம் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்த அவர் நடுத்தர வயதுடைய அதேசமயம் வீட்டுக்கு ஒரேபெண்ணாக உள்ளவரையே தேர்வுசெய்துள்ளார்.
ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதா? அரசு வேலை என்றதும் ஆசைப்பட்டு அப்பாவியாக ஏமாறுவோரைக் குறைசொல்வதா?
தீர விசாரிக்க வேண்டாமா திருமணத்துக்குமுன்…?