ஆழ்கடலுக்குள் சைக்கிள் ஓட்டிய வாலிபர்

197
Advertisement

சாலையில் சைக்கிள் ஓட்டிச்செல்வதே சாதனையாக
இருக்கும் இக்காலத்தில் இளைஞர் ஒருவர் கடலுக்குள்
சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

வாகனப் பெருக்கம் காரணமாக சைக்கிள் ஓட்டிச்
செல்வது அருகிவிட்ட நிலையில், பெட்ரோல் விலை
உயர்வு, ஊரடங்கு காரணமாக சைக்கிள் போக்குவரத்து
உலகமெங்கும் அதிகரித்து வருகிறது.

உடல் ஆரோக்கியம் விழிப்புணர்வு காரணமாகவும்
நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் கொண்டவர்கள்,
தொப்பையைக் குறைக்கும் எண்ணமுள்ளோர் போன்றவர்கள்
சைக்கிளில் செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர்.

இதனால், சைக்கிள் ஓட்டுவதற்கென சாலையில் தனிப்
பாதையை ஏற்படுத்தித் தரவேண்டுமென்னும் கோரிக்கை
வலுத்து வருகிறது. அதேசமயம், உலகில் மிக நீண்ட
காலமாகப் பயன்பாட்டிலுள்ள ஒரு வாகனமாக சைக்கிள்
உள்ளது.

மனிதர்களின் உற்ற தோழனாக விளங்கும் சைக்கிளின்
தினமாக ஜுன் 3 ஆம் தேதியை ஐநா சபை அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் அரவிந்த்
சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள நீலாங்கரைப்
பகுதியில் நிலப்பரப்பிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு
கடலுக்குள் சென்று சைக்கிள் ஓட்டிச் சென்று சாகசம்
புரிந்துள்ளார்.

கடலின் மேல்மட்டத்திலிருந்து 55 அடி ஆழத்திற்குச் சென்று,
மூச்சை அடக்கி. பாறை மற்றும் மணல் பரப்புக்கிடையே
இரண்டரை நிமிடம் சைக்கிள் ஓட்டியுள்ளார் அரவிந்த்.

கடலோரப் படையின் அனுமதி பெற்று ஆழ்கடலுக்குள்
சைக்கிள் ஓட்டியுள்ள இவர் கடல் வளம், பாதுகாப்பு, உடல்
ஆரோக்கியத்தை வலியுறுத்தி இவ்வாறு பயணித்துள்ளதாகக்
கூறியுள்ளார்.

இரு சக்கர வாகனத்தைப்போல பெட்ரோல் செலவும் இல்லை.
பெரிய அளவில் பராமரிப்புச் செலவும் இல்லை. சைக்கிளின்
விலையும் குறைவுதான். ஆனால், சைக்கிள் ஓட்டுவதோ
ஆரோக்கியம் எனும் பெரிய சொத்து சேர்ப்பது போன்றது.

எனவே, எங்கு சென்றாலும் சைக்கிளில் பயணிப்போம்.
சுற்றுச்சூழலைக் காத்து நமது ஆரோக்கியத்தை அதிகரித்து
பெட்ரோல் செலவில்லாமல் நிம்மதியாக வாழ்வோம்…