சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி!

270

சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்தவர், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி, புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சுகதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அறிகுறி உள்ளதாக கூறப்படும் நபரின், குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


முன்னதாக நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறினார். இதுவரை தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், விமான நிலையங்களில் தொடர் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.