தீவு விட்டு தீவு போக ஒரு நிமிஷம் போதும்! ஆச்சரியப்படுத்தும் அதிசய விமானம்..

152
Advertisement

உலகம் முழுவதும் விரைவான பயணங்களுக்கு மக்கள் நாடுவது விமானங்களை தான். ஆனால், ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு ஒரு நிமிடத்தில் செல்ல முடியும் என்றால் நம்ப முடிகிறதா? இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பப்பா வெஸ்ட்ரே தீவுகளுக்கு வானிலை சாதகமாக இருக்கும் பட்சத்தில் வெறும் 47 வினாடிகளில் சென்று விடலாம்.

அப்படியே தாமதம் ஏற்பட்டாலும் 90 வினாடிகளில் இலக்கை அடைந்து விடும் இந்த விமானம் பயணிப்பது என்னவோ 2.7 கிலோமீட்டர்கள் தான். கார், இருசக்கர வாகனம் என எந்த வகையான போக்குவரத்து வசதிகளும் சாத்தியப்படாத இந்த இரு தீவுகளுக்கிடையே விமானத்தில் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த பயணத்திற்காக இயக்கப்படும் லோகனேர் நிறுவனத்தின் LM711 மாடல் உலகிலேயே மிக குறுகிய விமானம் ஆகும்.

எட்டு பேர் மட்டுமே அமரக் கூடிய இந்த சிறிய ரக விமான சேவையை லோகனேர் நிறுவனம் 50 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அரிய வகை பறவைகள் மற்றும் உயிரினங்கள் வாழும் இயற்கை எழில் கொஞ்சும் வெஸ்டரே தீவின் மக்கள்தொகை நூறுக்கும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.