லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசிமூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும் இவர் 10 நாட்களுக்கு ஒருமுறை பாம்பு விஷத்தை ஊசி மூலம் தனது உடம்புக்குள் செலுத்திக்கொள்கிறார்.
1988 ஆம் ஆண்டில் இந்தப் பழக்கத்தைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஆயிரத்து 500 முறைக்குமேல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
”இது மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி” என்று கூறியுள்ளது அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
”பெரிய மருந்து நிறுவனங்கள் ஆப்பிரிக்கா, ஆசியாவைக் கண்டுகொள்வதில்லை. ஒவ்வோராண்டும் ஆப்பிரிக்காவில் ஒன்றரை லட்சம்பேர் பாம்புக்கடியால் இறக்கிறார்கள். 5 லட்சம்பேர் பாம்புக்கடியால் தங்கள் உறுப்புகளை இழக்கிறார்கள்” என்றுகூறும் அவர்,
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு லண்டனுக்குச் சென்றார். அங்கு விலங்குகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. அப்போதுதான் அவருக்கு இந்த யோசனை வந்துள்ளது.
பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்துவது சாத்தியமா என்பதை அறிந்துகொள்ள முதலில் விரும்பியுள்ளார். இதற்காக 1948 ஆம் ஆண்டில் தனது உடம்பில் பாம்பு விஷத்தைச் செலுத்திய நபரைத் தேடிச்சென்று சந்தித்துள்ளார்.
அவரைச் சந்தித்த பிறகு ஏற்பட்ட நம்பிக்கையால் 1988 ஆம் ஆண்டில் முதன்முறையாகத் தனது உடம்பில் பாம்பு விஷத்தை செலுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
இதற்காகத் தனது வீட்டில் நாகப் பாம்பு உள்பட 33 விதமான விஷப்பாம்புகளை வளர்த்து வருகிறார். அவற்றிடமிருந்து விஷங்களைப் பெற்றுத் தனது உடலில் செலுத்திக்கொள்கிறார். விஷத்தைப் பெறுவதைப் ‘பால் கறத்தல்’ என்று பெருமையோடு கூறுகிறார் ஸ்டீவ் லுட்வின்.
தைரியமான மனிதர் எனச் சொல்வதா, விந்தையான மனிதர் எனச் சொல்வதா ஸ்டீவ் லுட்வினை?