பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார். பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார் என்று கூறியுள்ள அன்புமணி, தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது என்றும் கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும் என்று அன்புமணி தெரிவித்துள்ளனர். மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.