ஒரு ரூபாய்ப் பிச்சைக்காரரின் இறுதிச்சடங்கில் 4000பேர்

313
Advertisement

ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாகப் பெற்று ஜீவனம்
நடத்தியவரின் இறுதிச்சடங்கில் 4 ஆயிரம்பேர்
கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய நிகழ்வு
இதயத்தை வருடுவதாக அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஹுப்ளி நகரிலுள்ள பேருந்து
நிறுத்தம் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாகப்
பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர் பசப்பா என்கிற
ஹச்சா பஷ்யா. எங்கிருந்து வந்தார், எந்தப் பகுதியைச்
சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாது.

ஒரு ரூபாய் கொடுத்தால் பெற்றுக்கொண்டு புன்னகை
பூத்தபடி வாழ்த்துவார். ஆனால், ஒரு ரூபாய்க்குமேல்
கொடுத்தால் வாங்க மறுத்துவிடுவார். இதனால்
அப்பகுதி மக்களிடையே எளிதில் பிரபலமானார்.

சிறிது மனநலப் பிரச்சினையுடன் இருந்தாலும், யாரையும்
அவர் துன்புறுத்தியதில்லை. பேருந்து நிறுத்தம் அருகே
சிறு குடில்போன்று அமைத்துக் குடியிருந்த அவர் சிறிது
நேரம் அங்கு இல்லையென்றாலும் அப்பகுதி மக்கள்
தேடத்தொடங்கிவிடுவார்கள்.

பலரும் இவருக்கு உணவு வாங்கிக்கொடுப்பார்கள்.
மாவட்ட நிர்வாகம் இவரை மறுவாழ்வு மையத்துக்கு
அழைத்துச்செல்ல முற்பட்டபோது அப்பகுதி மக்கள்
எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பகுதியிலேயே தங்க
வைத்துவிட்டனர். அந்தளவுக்கு பசப்பா மீது ஹுப்ளி
மக்கள் பாசத்தைப் பொழிந்துள்ளனர்.

இந்த நிலையில், பேருந்து மோதியதில் காயமடைந்தார்
பசப்பா. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

அதைக்கேட்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து உள்ளூர் மக்கள், வணிகர்கள் பணம்
திரட்டி பசப்பாவின் இறுதிச்சடங்கை சிறப்பாகச் செய்தனர்.
அதில் சுமார் 4 ஆயிரம்பேர் கலந்துகொண்டது பரபரப்பாகியுள்ளது.