40 பைசா மீதி கேட்டு போராடிய
வக்கீலுக்கு 4 ஆயிரம் அபராதம்

310
Advertisement

40 பைசா மீதியைத் தர உத்தரவிடக்கோரி வழக்குத்
தொடர்ந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் 4 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதித்துள்ளது சமூக ஊடகத்தில்
வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த
வழக்கறிஞரான மூர்த்தி, பெங்கரூவில் உள்ள
ஓட்டலில் உணவு ஆர்டர்செய்தார். அதற்கான
கட்டணமாக 265 ரூபாய் அவரிடம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், அந்த உணவு 264 ரூபாய் 60 பைசாதான் என்றும்,
மீதியுள்ள 40 பைசாவைத் திரும்பத் தரவேண்டும் என்றும்
ஓட்டல் ஊழியர்களிடம் வாதம்செய்துள்ளார். ஓட்டல்
ஊழியர்களோ 40 பைசாவைத் தர இயலாது என்று
தெரிவித்தும், அதனை ஏற்க மறுத்து நுகர்வோர்
நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு, ஜுன் 26 ஆம் தேதி
வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தனக்காக மூர்த்தியே நீதிமன்றத்தில் வாதாடினார்.
அப்போது ஓட்டல் நிர்வாகம் 40 பைசா மீதியைத் தர
வேண்டும் என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்
சலுக்காக 1 ரூபாய் தரவேண்டும் என்றும் வாதாடினார்.

ஓட்டல் தரப்பு வக்கீல்களோ, ஜிஎஸ்டி சட்டப்பிரிவு 170ன்படி,
பில்லிங் செய்யும்போது 50 பைசாவுக்குக் குறைவாக
சில்லரை வந்தால், அந்தப் பைசாவைக் குறைத்து அதற்கடுத்த
ரூபாயுடனும், 50 பைசாவுக்கு மேலே வந்தால் அதற்கடுத்த
அதிகப் பணத்துடனும் ரவுண்ட் ஆஃப் செய்யலாம் என்றும்
விதியுள்ளது. அந்த விதியின்படியே ரவுண்ட் ஆஃப்
செய்யப்பட்டுள்ளது என்று வாதாடினார்கள்.

இந்த வழக்கில் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், 40 பைசா கேட்டு வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற
நேரத்தை வீணடித்த வழக்கறிஞர் மூர்த்திக்கு நீதிபதிகள்
கண்டனம் தெரிவித்தனர்.. அத்துடன் ஓட்டல் நிர்வாகத்துக்கு
ரூ 2 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும், வழக்கு
செலவுக்காக மேலும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்
என்றும், அதை அடுத்த 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்
என்றும் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

40 பைசாவுக்கு ஆசைப்பட்டவர் 4 ஆயிரம் ரூபாய் அபராதம்
செலுத்தவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ள தகவல்
இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.