புகார் அளிப்பதிலும் உலக சாதனை புரிந்துள்ளார் ஒருவர்.
அப்படியென்ன அதிசயமான புகார் என்ன என்பதைப் பார்ப்போம்.
அவர் புகார் அளித்துள்ளது ஒரு விமான நிலையத்தின்மீது என்பது
தான் குறிப்பிடத்தக்கது.
அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல…12 ஆயிரத்து 271 புகார்கள்…
அத்தனைப் புகார்களையும் 2021 ஆம் ஆண்டில் அதாவது, ஒரே வருடத்தில்
அளித்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.
விநோதமான நிகழ்வுகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்தப்
புகார்கள் எதற்காகத் தெரியுமா?
விமானம் பறக்கத் தொடங்கும்போதும், தரையிறங்கும்போதும்
அதிக சத்தம் வருகிறதாம்….
யுவராஜ் தயாளன் இயக்கி 2015 ஆம் ஆண்டு வெளியான ‘எலி’ படத்தில்
வரும் வைகைப் புயல் வடிவேலுவின் நகைக்சுவைக் காட்சியை மிஞ்சி
விட்டது இந்த மனிதரின் செயல்.
‘எலி’ படத்தில் சமூக ஆர்வலராக விமானத்தை ரத்துசெய்யக்கோரி
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார் வடிவேலு.
அந்தப் போராட்டத்தின்போது ரத்துசெய் ரத்துசெய் விமானத்தை
ரத்துசெய் என்று அவர் கோஷமிட அவருடன் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளவர்களும் அப்படியே கோஷமிடுவார்கள்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறை அதிகாரி
போராட்டத்துக்கான காரணம் பற்றிக் கேட்கும்போது, ”இரவு 11
மணிக்கும், 1 மணிக்கும், 3 மணிக்கு அசந்து தூங்கும்போதும்,
அதிகாலை 5 மணிக்கும் பறந்துசெல்லும் விமானங்கள், தரை
இறங்கும் விமானங்களின் இரைச்சலால் தூக்கம்கெடுவதாகக்கூறி”
விமானங்களை ரத்துசெய்யக் கூறுவார் வடிவேலு.
அதேபோலதான் அயர்லாந்து நாட்டிலுள்ள வடமேற்கு டப்ளின்
பகுதியிலுள்ள ஓங்கர் என்ற நகரைச் சேர்ந்த ஒருவர், டப்ளின்
சர்வதேச விமான நிலைய அதிகாரிக்கு விமானங்களின் இரைச்
சலைக் கட்டுப்படுத்தக்கோரி புகார்களை சளைக்காமல் அனுப்பி
அதிகாரிகளைத் திணறவைத்துள்ளார்.
சர்வதேச விமான நிலையத்தின் தினசரி செயல்பாடுகள் பற்றிப்
புகார்கள் வருவது புதிய விஷயமல்ல. உள்ளூர்வாசிகளிடமிருந்தும்,
பயணிகளிடமிருந்தும் அடிக்கடி புகார்கள் வருவதும் இயல்பான
ஒன்றுதான். புகார்களை அனுப்புவர்களைப் பொருத்து புகார்களின்
தன்மை மாறுபடும்.
ஆனால், கற்பனைக்கும் எட்டாத அளவில் ஒரே மனிதர் விநோதமான
புகாரை ஆயிரக்கணக்கான மனுக்களாக அனுப்பி குவித்துவிட்டது
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வழக்கமாக
ஒன்றிரண்டு ஆயிரங்களில் மட்டுமே வெவ்வேறு தரப்பினரிடமிருந்து
வரும் புகார்களுக்கே திணறும் விமான நிலைய அதிகாரிகள்,
ஓங்கர் நகரின் ஆயிரக்கணக்கான புகார் மனுக்களைப் பார்த்து
மலைத்துவிட்டனராம்.
விமான நிலைய அதிகாரிகள் எப்படி சிக்கி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?