தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு குட் நியூஸ்..இந்த மருந்து மட்டும் கிடைச்சா செம!

84
Advertisement

நோய்களை சரி செய்வதற்காகத்தான் மருத்துவமனைக்கு செல்வோம். ஆனால், மருத்துவமனைக்கு செல்வதாலேயே புதிய நோய்கள் வரக்கூடும் என்பதை நம்ப முடிகிறதா? மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்படும் 11% தொற்றுக்கு அசினெட்டோபேக்டர்  பெமானி (Acinetobacter baumannii) என்ற கிருமிதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியாவிற்கு கிருமிக்கொல்லிகளை எதிர்க்கும் திறன் இருப்பதால், பயன்பாட்டில் இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் இந்த வகை கிருமித் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியாது. தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்படும்போது ஏற்படும் 7.9% தொற்றுக்கும், 5.7% முதல் 15.7% இரத்த தொற்றுக்கும் இந்த கிருமி தான் காரணமாக அமைகிறது.

பஞ்சுவில் 25 நாட்களும் உலர் காகிதத்தில் 6 நாட்களும் உயிர் வாழும்  கிருமிக்கு எதிராக போராடும் கிருமிக்கொல்லி மருந்தை பற்றிய ஆய்வுக்கட்டுரை, Nature ஆய்விதழில் Zampolani மற்றும் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. Zosurabalpin என அழைக்கப்படும் இந்த மருந்து ஆய்வுக்குட்ப்படுத்தப்பட்டு, அடுத்தக் கட்டமாக எலிகள் மற்றும் குறைந்த அளவிலான மனிதர்கள் என சோதனை செய்து பார்க்கப்பட்டதில் சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளன.

தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு அசினெட்டோபேக்டர் பெமானி கிருமியால் ஏற்படும் நிமோனியா மற்றும் ரத்த தொற்றுக்கு எதிராக Zosurabalpin செயல்படும். Zosurabalpin  எவ்வாறு செயல்படுகிறது என்பதை இலினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்கன் மற்றும் பால் ஆய்வு செய்துள்ளனர்.

தமிழகத்திலும் 2019ஆம் ஆண்டு சிதம்பரம் மற்றும் குழுவினர் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். Global Antibiotic Research and Development Partnership அமைப்பின் இயக்குனரான மருத்துவர் Laura Piddock, குறைந்த செலவில் Zosurabalpin மருந்தை தயாரிப்பது சவாலான ஒன்றாக அமையும் எனவும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த மருந்து கிடைப்பதற்கு சில காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மருந்து விரைவில் புழக்கத்திற்கு வரும் பட்சத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் அசினெட்டோபேக்டர் பெமானி கிருமியால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என மருத்துவர் வீ.புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.