இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

178

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை உள்தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனையொட்டி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.