கேரள பெண்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ்,
மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள், மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால், பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசுக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் வழக்கு
தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ள நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.